அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேச்சு பொருளாகியுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக ஆட்டம் காணத் தொடங்கியது. அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் பிரிந்து சென்று அமமுக என்ற கட்சியை ஒருபக்கம் தொடங்க, மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் எழுந்தது.
தற்போது அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்பு குழு (அதிமுக உமீகு) என்று தனியாக செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அதிமுகவை தொடர்ந்து நிர்வாகம் செய்து பொதுச்செயலாளராக தொடர்ந்து வருகிறார்.
தற்போது அமமுகவும், ஓபிஎஸ்ஸின் அதிமுக உமீகுவும் பாஜகவின் கூட்டணியில்தான் உள்ளன. சமீபத்தில் அதிமுகவும் பாஜக கூட்டணியில் இணைந்தது. மும்முனையில் மோதிக் கொள்ளும் மூவரும் ஒரே கூட்டணியில் இருப்பது என்ன விதமான விளைவுகளை உருவாக்கும் என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து சென்னை வந்த அமித்ஷா மூன்று பேரிடமும் தனித்தனியாக பேசி அறிவுரைகள் அளித்துள்ளாராம்.
தேர்தல் முடியும் வரை ஈபிஎஸ் - ஓபிஎஸ் - டிடிவி தினகரன் ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொள்ளப் போவதில்லை என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. முன்னதாக அதிமுகவின் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
கடந்த 2019ம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அதிமுக தரப்பில் இருந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளதாம், அதற்கு டிடிவி தரப்பும் சம்மதிக்க அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து, அதிமுக தொண்டர்கள் உண்மையான அம்மா விசுவாசிகள் அமமுகவிற்கு வரவேண்டும் என பேசிக் கொண்டிருந்தவருன் பேச்சிலும் தற்போது மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
நேற்று கூட ஒரு பேட்டியில் பேசியபோது டிடிவி தினகரன் “திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் வலுப்பெற வேண்டும். அம்மாவின் தொண்டர்கள் ஒரே கூட்டணியில் இணைய வேண்டும். அதுதான் இப்போது நடந்து வருகிறது. எல்லாரையும் ஆதரித்து செல்வோம்” என பேசியுள்ளார். இதனால் அடுத்தடுத்து தேர்தல் நெருக்கத்தில் நடைபெறும் கூட்டணி கட்சிகளின் மாநாடுகளில் ஒரே மேடையில் மூவரும் தோன்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K