சென்னை, சேத்துப்பட்டுக்கு அருகில் உள்ள ஹாரிங்டன் சாலையில் வசிப்பவர் சந்திரன்(74). இவர் ஒரு தொழிலதிபர்.
நேற்று காலை 10 மணியளவில் அவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரது வீட்டில் ஒரு பெண் உட்பட 5 மர்ம நபர்கள் இருந்துள்ளனர். மேலும், அவர்கள் சந்திரனின் தம்பி, மற்றும் அங்கு பணிபுரியும் பெண் மேலாளர் மற்றும் வேலைக்கார பெண்கள் ஆகியோரை கத்திமுனையில் மிரட்டி ஒரு அறையில் பூட்டினர்.
அதன்பின், சந்திரனையும் கத்தி முனையில் மிரட்டி, அங்கிருந்த பெண்ணோடு சேர்ந்து அவரை ஆபாச படம் எடுத்தனர். அந்த படத்தை இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ.2 கோடி கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு அவரை மிரட்டியபடி இருந்துள்ளனர்.
இதற்கிடையில் அவர்களுக்கு தெரியாமல், அங்கு வேலை செய்யும் பெண் போலீசாருக்கு புகார் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். அவர்களை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால், அந்த பெண் உட்பட 2 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
விசாரணையில் தொழிலதிபருக்கு நன்கு தெரிந்த நபரான மணிகண்டன் என்பவர், அவரிடம் பணம் பறிப்பதற்காக இந்த வேலையை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்தான் போலீசாரிடம் சிக்கிக் கொண்டவர் ஆவார்.
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மூன்று நபர்களையும் தேடி வருகின்றனர்.