மலேசியாவில் வேலை வாங்கி தறோம் சார்?? – 50 பேரை ஏமாற்றிய பெண் குரல்

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (13:09 IST)
சென்னையில் வேலையில்லாமல் அழையும் இளைஞர்களை மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக சொல்லி பணத்தை ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரித்துள்ள பட்டத்தாரி இளைஞர்களின் எண்ணிக்கைக்கு கணிசமான அளவிலேயே வேலையில்லா திண்டாட்டமும் உள்ளது. இதனால் பல இளைஞர்கள் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு வேலை தேடி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதை ஒரு வாய்ப்பாக கொண்டு ஏமாற்றும் கும்பலும் அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் வேலை தேடி ஆன்லைனில் விண்ணப்பத்திருக்கிறார்கள் இளைஞர்கள் சிலர். அவர்களது மொபைல் எண்களை ரகசியமாக கைப்பற்றிய ஏமாற்று கும்பல் ஒன்று அவர்களுக்கு போன் செய்துள்ளது. அதில் இளைஞர்களிடம் பெண் ஒருவர் பேசியிருக்கிறார். மலேசியாவை சார்ந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ள அவர் “நீங்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். சென்னையில் உள்ள எங்கள் நிறுவன கிளையில் உங்களுக்கு நேர்காணல் மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும்” என கூறியுள்ளனர்.

இளைஞர்களும் அதை நம்பி அந்த பெண் சொன்ன நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு பெயருக்கு நேர்காணல், உடல்தகுதி தேர்வு நடத்திவிட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். பிறகு விமான டிக்கெட், தங்குமிட செலவுகள் மற்றும் விசாவுக்காக ரூபாய் 50 ஆயிரம் மட்டும் கட்ட வேண்டும் என கூறியிருக்கிறார்கள்.

வேலை கிடைத்துவிடும் என்ற ஆர்வத்தால் பல இடங்களில் பணத்தை கடன் வாங்கி கட்டியிருக்கிறார்கள் அந்த இளைஞர்கள். ஒரு மாதத்திற்குள் விசா வந்துவிடும். அப்போது உங்களுக்கு கால் செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் போனும் வரவில்லை, விசாவும் வரவில்லை. நேரில் சென்று பார்க்கலாம் என்றால் அந்த இடத்தில் அந்த அலுவலகமே இல்லை.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இளைஞர்களுக்கு போன் செய்யப்பட்ட எண், அது உபயோகப்படுத்தப்பட்ட போன் ஆகியவற்றை கண்டுபிடித்த போலீஸார், போனில் பேசி வரவழைத்த அருணா என்ற பெண்ணை கையும், போனுமாக பிடித்தார்கள். ஆனாலிந்த மோசடி நிறுவனத்தை நடத்திய ரூபன் சக்கரவர்த்தி மற்றும் அவருக்கு ஆள் பிடித்து கொடுத்த ஏஜெண்டுகள் தப்பி விட்டார்கள். அவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்