தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:58 IST)
சென்னை தி நகர் அருகே மெட்ரோ பணியின் போது ரசாயன கசிவு ஏற்பட்டதாகவும், அப்போது ஒரு வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததாகவும் வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அதிகம் உள்ள தி.நகர் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் கோடம்பாக்கம் ரயில் நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்காக ரசாயன திரவம் பயன்படுத்தப்பட்டது. அப்போது அந்த பகுதியில் ரசாயன கசிவு ஏற்பட்டதாகவும், எந்த இடத்தில் கசிவு ஏற்பட்டது என்பதை கண்டறியும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், லாலா தோட்டம் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தரைப்பகுதி திடீரென பூமியில் புதைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனால், வீட்டுக்குள் பள்ளம் ஏற்பட்டதாகவும், அங்கு சென்று மெட்ரோ அதிகாரிகள் பார்த்த போது அந்த வீட்டில் தான் ரசாயன கசிவு ஏற்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. நல்ல வேலையாக, வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை என்றும், உடனடியாக மெட்ரோ ஊழியர்கள் கசிந்திருந்த ரசாயனத்தை அப்புறப்படுத்தி, கான்கிரீட் கலவையை கொண்டு பூசி, வீட்டில் தரை பகுதியை சரி செய்ததாகவும் தெரிகிறது.

சேதமடைந்த வீட்டை முழுமையாக சீரமைத்து தருவதாக மெட்ரோ நிறுவனம் வீட்டின் உரிமையாளரிடம் உறுதியளித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்