புரெவி எதிரொலி: மீண்டும் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (10:57 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்படுகிறது. 
 
சமீபத்தில் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்த நீரின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி மொத்த கொள்ளளவான 24 அடிகளில் 22 அடி தண்ணீர் நிரம்பியது.
 
இதனை அடுத்து முதலில் 1000 கன அடி முதல் 9 ஆயிரம் கன அடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது என்பதும் இதனால் அடையாறு உள்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இதன் பின்னர்மழை இல்லாத காரணத்தினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது புரெவி புயல் காரணமாக மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. 
 
இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று நண்பகல் முதல் ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குன்றத்தூர், நத்தம், திருமுடிவாக்கம், திரூநீர்மலை, வழிநிலை மேடு ஆகிய ஊர்களில் தாழ்வாக பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்