கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்..!

Siva

புதன், 13 நவம்பர் 2024 (07:28 IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடி மதிப்பில் பூங்கா அமைக்கப்பட இருப்பதாக தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில், கிழக்குக்கரை சாலையில் உள்ள கோவளம் அருகே 100 கோடி செலவில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்கப்பட இருப்பதாகவும், இதற்காக 223 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகவும் தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிதி உதவியுடன் இந்த பூங்கா அமைக்கப்படும் என்றும், இந்த பூங்கா அருகில் நட்சத்திர விடுதிகள், வாகனம் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி ஆகியவை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய வரலாற்று சின்னங்களை குறிக்கும் வகையில், கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், கைவினைப் பொருட்கள், பொம்மை பூங்கா போன்றவற்றின் சிறு உருவங்கள் இந்த பூங்காவில் இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பொழுதுபோக்கிற்காக அனைத்து விதமான அம்சங்களும் இந்த பூங்காவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. குழந்தைகள் விளையாடும் பகுதி, மலர் தோட்டம், சமூக நிகழ்வுகளை நடத்தும் நிகழ்வு ஆகியவை அமைக்கப்பட இருப்பதாகவும், அதுமட்டுமின்றி கூடைப்பந்து, டென்னிஸ், வாலிபால் விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட இருப்பதாக சுற்றுலாத்துறை தெரிவிக்கிறது.



Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்