பொன்முடி வழக்கை சிபிஐக்கு மாற்றிவிடுவேன்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!

Mahendran

வெள்ளி, 4 ஜூலை 2025 (15:28 IST)
முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதுள்ள புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடுவேன் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்தும் சைவம் மற்றும் வைணவம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சம்பவத்தை, நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், "பொன்முடியின் பேச்சு தொடர்பாக மூன்று காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அவரது பேச்சு 'வெறுப்புப் பேச்சு' வரம்பில் வராது எனக் கூறி அந்தப் புகார்கள் முடித்து வைக்கப்பட்டதாகவும்" தெரிவித்தார்.
 
 மேலும், "112 புகார்கள் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்ட நிலையில், அதன் மீது விசாரணை நடந்து வருவதாகவும், 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைத்தான் பொன்முடி குறிப்பிட்டுப் பேசியதாகவும்" அவர் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
 
இதனை அடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "பொன்முடிக்கு எதிரான புகார் மீது காவல்துறை உரிய விசாரணை செய்யத் தயங்கினால், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி விடுவேன்" என்று கடுமையாக எச்சரித்தார். அத்துடன், "50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை அவர் பேசியிருக்கலாம்,  அமைச்சராகப் பதவி உயர்ந்தவர் இதுபோல் ஏன் பேச வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். 
 
"ஒரு அமைச்சர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன" என்றும் அவர் தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கை ஜூலை 8 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்