சினிமா பட பாணியில் சேசிங் - என்கவுண்டர்.! துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைது..! நடந்தது என்ன.?

Senthil Velan
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (13:35 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சினிமா பாணியில் ஏ.டி.எம் கொள்ளையர்களை விரட்டி சென்ற போலீசார் துப்பாக்கி முனையில் 5 பேரை கைது செய்ததோடு ஒருவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  
 
கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏடிஎம் எந்திரங்களை கேஸ் கட்டிங் மூலம் வெட்டி எடுத்து மர்ம கும்பல் ஒன்று பணம் கொள்ளையடித்தது. கொள்ளையடித்த ரூ.65 லட்சத்தை கன்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் தமிழ்நாடு தப்பி வந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு வரும் வழிகளில் ஏராளமான வாகனங்கள் மீது கன்டெய்னர் லாரி மோதி வந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தாறுமாறாக சென்ற கன்டெய்னர் லாரியை போலீசார் 30 வாகனங்களில் விரட்டிச் சென்று  சினிமா பாணியில் விரட்டிப்பிடித்தனர்.  அப்போது கன்டெய்னர் லாரியை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி ஓட்டுநரை சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கி முனையில் கைது:

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கொள்ளையன் அரியானாவைச் சேர்ந்த ஜமாலுதீன் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த கொள்ளையனின் உடல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டது. கொள்ளை கும்பலைச் சேர்ந்த மேலும் 5 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைதான கும்பல் ராஜஸ்தான் மற்றும் அரியானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையர்கள் வந்த கன்டெய்னர் லாரிக்குள் கார், ஏ.டி.எம்.இயந்திரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூர் மாவட்டத்தில் 3 இடங்களில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் மற்றொரு ஏடிஎம் எந்திரத்தையும் தூக்கி வந்தனர்.  

கன்டெய்னருக்குள் இருந்த சொகுசு கார் மற்றும் கட்டுக்கட்டாக இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். கேரளாவில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.65 லட்சம் மட்டுமின்றி மேலும் ஏராளமான பணம் கன்டெய்னருக்குள் இருந்தது தெரியவந்தது.  சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் பிடிபட்டவர்கள் பவாரியா கும்பல் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கன்டெய்னர் லாரியில் சென்று நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளையடிப்பது பவாரியா கும்பலின் வழக்கம். ஏ.டி.எம் கொள்ளையில் மட்டுமின்றி கேரளாவில் நடந்த 2 கிலோ தங்கம் வழிப்பறியிலும் பிடிபட்டவர்களுக்கு தொடர்பா? என விசாரணை நடைபெற்று வருகிறது. 


ALSO READ: மக்களுக்கு ஷாக் நியூஸ் - “சென்னையில் மீண்டும் உயரும் சொத்து வரி”..!
 
இந்த தகவலை அறிந்ததும் திருச்சூரில் இருந்து கேரள தனிப்படை போலீசார் தமிழகம் விரைந்துள்ளனர். சினிமா பட பாணியில் நடந்த இந்த கைது சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்