இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

Siva

ஞாயிறு, 20 ஜூலை 2025 (17:13 IST)
தமிழகமெங்கும் முருகப் பெருமான் கோயில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு களைகட்டியது! ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளான ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில்களில் திரண்டு தங்கள் வேண்டுதல்களை சமர்ப்பித்தனர். தமிழர்களின் முக்கிய கடவுளான முருகனுக்கு உகந்த இந்த நன்னாளில் விரதமிருந்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும், குழந்தை பாக்கியம் மற்றும் திருமண வரம் கிட்டும் என்பது ஐதீகம்.
 
இன்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்ட திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கிற்கு பின் நடக்கும் மண்டல பூஜையும் கூட்டத்திற்கு மேலும் ஒரு காரணமாக அமைந்தது. அதேபோல, சுவாமிமலை முருகன் கோயிலில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று முருகப் பெருமானின் தங்க கவச அலங்கார தரிசனம் கண்டனர்.
 
திருநெல்வேலி குறுக்குத்துறை, பாளையஞ்சாலை, ஊத்தங்கரை, காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள முருகன் மற்றும் சிவன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 
 
பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாராயணம் செய்து, அன்னதானத்திலும் பங்கேற்றனர். இந்த ஆடி கிருத்திகை, பக்தர்களுக்கு ஆன்மீக அமைதியையும், மனநிறைவையும் அளித்தது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்