கடந்த வருடம் இளம்பெண் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பகலில் மக்கள் அதிகம் கூடும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்த கொடூர சம்பவத்தை நடத்திவிட்டு கொலையாளி தப்பித்து ஓடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடந்த வாருடம் ஜூன் 24-ஆம் தேதி சென்னை சூளைமேட்டை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி காலை 6.30 மணிக்கு வெட்டி கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளியை கண்டுபிடிக்க போலீசாருக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.
இதனையடுத்து ரயில் நிலையத்தின் அருகில் உள்ள கட்டிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை வைத்து ராம்குமார் என்பரை அடையாளம் கண்டனர். இதனையடுத்து ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததே காரணம் என ரயில்வே நிர்வாகத்தின் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்பயா திட்டத்தின் கீழ் 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் டிசம்பர் மாதத்துக்குள் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தெற்கு ரெயில்வே கோட்ட முதுநிலை பாதுகாப்பு ஆணையர் கே.கே.அஷ்ரப் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதனையடுத்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி இன்று தொடங்கியது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மொத்தம் 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.