ஆம்ஸ்ட்ராங் படுகொலையை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி

Mahendran
சனி, 6 ஜூலை 2024 (11:42 IST)
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.
 
மேலும் ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்றும், உண்மை குற்றவாளிகளை கைது செய்து கொலைக்கான பின்னணியை கண்டறிய வேண்டும் என்றும், இந்த சம்பவம் உளவுத்துறையின் தோல்வியால் நடந்து உள்ளதால் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நெல்லையை சேர்ந்த கூலிப்படைகள் தான் காரணம் என்றும் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில்  சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரிக்கப்பட்டதாகவும், கலைந்து செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் போலீசார் ஏற்றியதாகவும் தெரிகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்