கர்நாடகத்தின் துரோகங்களுக்கு திமுக அரசு துணை போகிறது.. காவிரி நீர் பிரச்சனை குறித்து அன்புமணி..!

Mahendran
செவ்வாய், 9 ஜூலை 2024 (12:16 IST)
கர்நாடக காவிரி  அணைகளில்  15 நாட்களில் 30 டி.எம்.சி நீர்மட்டம் உயர்வு: தமிழக அரசு பொறுப்பை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை பெற வேண்டும்!
 
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீர்மட்டம்  கடந்த  15 நாட்களில் 30  டி.எம்.சி  அதிகரித்திருக்கிறது.  மழை தொடர்வதால் கர்நாடக அணைகளின்  நீர்மட்டமும்  தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கான தண்ணீரைப் பெற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.
 
கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி. கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் நீர் இருப்பு நேற்று காலை நிலவரப்படி  67.20 டி.எம்.சியாக உள்ளது. இது அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 59% ஆகும். நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு  23,528 கன அடி வீதம் தண்ணீர் வந்து  கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 24-ஆம் நாள் நிலவரப்படி  4 அணைகளிலும் சேர்த்து  37.96 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருந்தது.  கடந்த 15 நாட்களில் 30 டி.எம்.சி அளவுக்கு நீர் இருப்பு அதிகரித்திருக்கிறது.  இதே அளவில் நீர் வரத்து நீடித்தால் தினமும் 2 டி.எம்.சி என்ற அளவில் நீர் இருப்பு அதிகரிக்கும். 
 
கர்நாடக அணைகளின் நீர்மட்டம் இந்த அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகத்திடமிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற திமுக அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை.உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் 10 டி.எம்.சி, ஜூலை மாதத்தில் 34 டி.எம்.சி என இம்மாத இறுதிக்குள்ளாக 44 டி.எம்.சி  தண்ணீரை திறந்து விட வேண்டும்.  இன்று வரை  20 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒரு டி.எம்.சி தண்ணீரைக் கூட  தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் வழங்கவில்லை. அதை  தமிழக அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 
 
கர்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டி.எம்.சி தண்ணீர் கூட கர்நாடகத்திலிருந்து காவிரியில்  திறந்து விடப்படவில்லை. அதனால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்து விட்டது. இதுவரை நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் தேவை. ஆனால், இதை அறியாமலேயே  காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் துரோகங்களுக்கு திமுக அரசு துணை போய்க் கொண்டிருக்கிறது. இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் உழவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
 
எனவே, தமிழக அரசு அதன் பொறுப்பை உணர்ந்து மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி,  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்  அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய  தண்ணீரை காவிரியில் திறந்து  விடும்படி வலியுறுத்த வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்