11 எம்.எல்.ஏக்கள் வழக்கு ; இன்று தீர்ப்பு வழங்கக் கூடாது : நீதிமன்றத்தில் மனு

Webdunia
வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (13:05 IST)
துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கக்கூடாது என நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது.

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஒபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர். கொரடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
 
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.15 மணிக்கு வெளியாகவுள்ளது. இன்றைய தீர்ப்பு தான் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர்களின் அரசியல் எதிர்கால வாழ்க்கையை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கக்கூடாது என பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. எப்போது தீர்ப்பு வழங்குவது என எங்களுக்கு தெரியும் என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அறிவித்தபடி இன்று தீர்ப்பு வெளியாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
எனவே, 11 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று 2.15 மணிக்கு வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்