அது தலைவெட்டி முனியப்பன் இல்ல.. புத்தர் சிலை!? – நீதிமன்ற தீர்ப்பால் மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:31 IST)
சேலத்தில் கடந்த பல ஆண்டுகளாக தலைவெட்டி முனியப்பன் என மக்கள் வணங்கி வந்த சிலை புத்த சிலை என தீர்ப்பு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி அலுவலகம் பின்புறம் கோட்டை மைதானத்தை ஒட்டி அமைந்துள்ள சிறு கோவில் தலைவெட்டி முனியப்பன் கோவில். இந்த கோவிலுக்கு இரண்டு பக்கமும் அரசமர பிள்ளையார் மற்றும் திருமலையம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று கோவில்களும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

அப்பகுதி மக்களிடையே தலைவெட்டி முனியப்பன் கோவில் ரொம்ப பிரசித்தி பெற்றது. இந்த சிலையின் தலை வெட்டப்பட்டு பிறகு மீண்டும் ஒட்டப்பட்டதால் தலை ஒருபக்கம் சரிந்தபடி காணப்படுவதால் தலைவெட்டி முனியப்பன் என பெயர் பெற்றது. இந்நிலையில் அந்த கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் புத்த சங்கத்திற்கு சொந்தமானது என்றும், அந்த கோவிலில் உள்ள சிலை புத்தர் சிலை என்றும் கடந்த 2011ம் ஆண்டில் இந்திய புத்த சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கோவில் மற்றும் சிலையை ஆராய்ந்து அதுகுறித்து அறிக்கை தருமாறு தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த சிலை தலைவெட்டி முனியப்பன் அல்ல என்றும், அது புத்தர் சிலை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நீதிமன்றம் அளித்த உத்தரவில் புத்தர் சிலையை தலைவெட்டி முனியப்பனாக தொடர்ந்து பூஜைகள் செய்ய அனுமதிக்க முடியாது என்றும், அறநிலையத்துறையிடமிருந்து அந்த கோவிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருப்பது தலைவெட்டி முனியப்பன் தான் என்றும், கோவிலை விட்டுத்தர முடியாது என்றும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்