சுற்றுப்பயணம் போகும் ஓபிஎஸ்; அமைச்சரவையை கூட்டும் எடப்பாடி: அதிமுக இணைப்பு நடந்த மாதிரிதான்!

Webdunia
திங்கள், 1 மே 2017 (15:18 IST)
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்காக இரு தரப்பினரும் குழுக்கள் அமைத்துள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் முன்னரே முட்டி மோதி ஒருவரை இருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் இரு அணிகள் இணைப்பு தற்போது வரை காணல் நீராக உள்ளது.


 
 
இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடும்விதமாக ஓபிஎஸ் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
 
வரும் 5-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் ஓபிஎஸ்ஸின் இந்த பயணம் ஒரு மாத காலம் நீடிக்கும் என கூறப்படுகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முன்னர் தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். மேலும் இன்று மாலை நடைபெற உள்ள மே தின பொதுக் கூட்டத்திலும் சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட திட்டமிட்டுள்ளார்.
 
ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை முயற்சியை கைவிட்டு அவர்களின் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதால் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மாற்று வழிகளை யோசித்து வருகின்றனர். இதனையடுத்து அவசரமாக நாளை அமைச்சரவையை கூட்டுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாளை காலை 11 மணிக்குக் கூடும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்