புறக்கணித்த பாஜக, ஆதரித்த அதிமுக! வியப்பில் திமுக! - அரசியல் ஆட்டத்தில் நடக்கும் ட்விஸ்ட்!

Prasanth Karthick

புதன், 5 மார்ச் 2025 (14:42 IST)

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்ததுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த தசாப்தங்களில் எதிரெதிராக இயங்கி வந்த கட்சிகள் திமுக - அதிமுக. திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கட்சியை வலிமைப்படுத்தினார். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட உட்கட்சி மோதல்களால் கட்சி பலவறாக சிதறியது. இதற்கிடையே மத்தியில் ஆளும் செல்வாக்கைக் கொண்டு பாஜகவும் தமிழகத்தில் ஆழமாக காலூன்றியுள்ளது. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தங்களை வலுப்படுத்திக் கொண்டு தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.

 

முந்தைய தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக, பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளால் கூட்டணியை விட்டு விலகியது. அதுமட்டுமல்லாமல் பல இடங்களிலும் பாஜகவை அதிமுக விமர்சித்தது. தமிழ்நாடு பாஜகவை மட்டுமல்லாமல் மத்திய அரசின் திட்டங்களையுமே அதிமுக சமீபமாக நேரடியாக எதிர்த்து பேசி வருகிறது. ஆனால் அதேசமயம் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கும் வெளிப்படையான பதிலளிப்பதை அதிமுகவினர் தவிர்த்து வருகின்றனர். பாஜகவும் இந்த விவகாரத்தில் மௌனத்தையே கடைப்பிடிக்கிறது.

 

இந்நிலையில்தான் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக் கட்சி சந்திப்பை மு.க.ஸ்டாலின் கூட்டினார். ஆனால் அதில் பாஜக பங்கேற்க மறுத்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸும் இந்த கூட்டத்தை புறக்கணித்தது. ஆனால் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டார். மேலும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக திமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவின் இந்த மனமாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

முன்னதாக அதிமுக குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியபோது கூட, அதிமுக மீண்டும் வலிமை பெற்று வர வேண்டும் என்றும், திமுகவுக்கு எதிர்கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் அதிமுகவின் இந்த அணுகுமுறை பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்