தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியும் தமிழ் மாநில காங்கிரசும் தவிர, கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால், தொகுதி எண்ணிக்கை குறையும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என சில நாட்களுக்கு முன் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் தமிழக பாஜக தவிர, அனைத்து கட்சிகளும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி உள்பட பல கட்சிகள் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.