தினகரன் தகுதி இழப்பு? - 3 ஆண்டுகளுக்கு போட்டியிட தடை வருமா?

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (13:00 IST)
ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தரப்பு பணத்தை வாறி இறைத்து செலவு செய்ததால், அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாதபடி  தடை விதிக்கப்பட வாய்ப்பிருகிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.

 
ஆர்.கே.நகரில் கடந்த 21ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. சுயேட்சை வேட்பாளர்களோடு சேர்த்து 50க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டாலும் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூவருக்கும் இடையே மட்டுமே பலத்த போட்டி நிலவுகிறது.  
 
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக மற்றும் தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது. ஆனால், தினகரன் அந்த புகாரை மறுத்தார். 
 
அதேபோல், ஆர்.கே.நகர் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளர்களும் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கவனிக்க 3 பொதுப்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் செய்யும் போது அதற்கான செலவுகளை கணக்கிட்டு வந்தனர். இதில், தினகரன் பிரச்சாரத்திற்கு அதிக அளவில் ஆட்கள் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கான செலவு, பூ இறைப்பது, ஆரத்தி, கோலம் போடுவது என அனைத்திற்கும் ஆன செலவுகள் கண்காணிக்கப்பட்டது. மேலும், அந்த செலவுகள் தினகரனின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டது.
 
பொதுவாக, ஒரு வேட்பாளர் ரூ. 28 லட்சம் வரை செலவு செய்யலாம். ஆனால், தினகரன் தரப்பு ரூ.30 லட்சத்தை தாண்டி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு உறுதியானால், தினகரனுக்கு தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும். 

 
தனது தேர்தல் செலவு கணைக்கை தாக்கல் செய்ய தினகரனுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் இருக்கிறது. எனவே, அவர் அதை சமர்பித்த பின், செலவினப் பார்வையாளர்கள் வழங்கிய கணக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். அதில் உள்ள செலவுகள் குறித்து தினகரனிடம் விளக்கம் கேட்கப்படும்.  அதிகம் செலவாகவில்லை என்பதை தினகரன் நிரூபிக்க வேண்டும். இல்லையேல், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
 
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில் தினகரனே வெற்றி பெறுவார் என செய்தி வலம் வருகிறது. இது அதிமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. எனவே, தினகரன் தரப்புக்கு வைக்க எடப்பாடி அரசு வைத்த செக்காகவே இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.
 
ஒருவேளை அவர் வெற்றி பெற்றால், தேர்தல் கமிஷன் மூலம், அவரின் தேர்தல் செலவு கணக்குகள் நோண்டப்பட்டு, அவருக்கு குடைச்சல் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்