தருமபுரி மாவட்டம் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் வசிப்பவர் தனசேகரன். லாரி டிரைவரான தனசேகரனுக்கு திருமணமாகி யாசினி என்ற மனைவியும், சாந்தினி, ஷபானா என்ற இரு மகள்களும் உள்ளனர். தற்போது பல பகுதிகளிலும் வெயில் வாட்டி வரும் நிலையில் வெளியே கடைக்கு சென்ற யாசினி வரும்போது நுங்கு வாங்கி வந்துள்ளார்.
ஆனால் அவர் அதிக விலைக்கு நுங்கு வாங்கிவிட்டதாக தனசேகரன் சண்டை போட்டதாக தெரிகிறது. பதிலுக்கு யாசினியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருசமயம் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தனசேகரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி யாசினியை சரமாரியாக குத்தியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மகள் சாந்தினி தடுக்க முயன்றபோது அவருக்கும் சில கத்திக்குத்துகள் விழுந்துள்ளது.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக யாசினியையும், சாந்தினியையும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தனசேகரையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தனசேகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நுங்கு வாங்கியதால் ஏற்பட்ட பிரச்சினையில் தாய், மகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.