திராவிட இயக்கத்தில் பார்ப்பனிய சக்திகளை ஊடுருவ எம்ஜிஆர் அனுமதித்து விட்டதாக தொல். திருமாவளவன் பேசியதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள அவர் “"உன் முகத்தைக் காட்டினால் முப்பது இலட்சம் வாக்குகள் நிச்சயம்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டும் அளவுக்கு மக்கள் செல்வாக்கைப் பெற்றத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவரின் மக்கள் செல்வாக்கு தான் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தது. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதல் இடைத் தேர்தலிலேயே தனக்குள்ள மக்கள் செல்வாக்கை நிருபித்தவர்.
இப்படிப்பட்ட மக்கள் தலைவரை, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை, திராவிட இயக்கத்தில் பார்ப்பனியத்தை ஊடுருவச் செய்தவர் என்றும், ஒரு பார்ப்பனிய பெண் திராவிட இயக்கத்தின் தலைவராக மாற பாதை வகுத்து தந்தவர் என்றும் திரு. தொல் திருமாவளவன் பேசி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பாடுபட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரை விமர்சிப்பது நியாயமற்ற செயல்.
"வறியவர்களுக்கு வழங்கிய வள்ளல்களின் புகழைப் பற்றித்தான் உலகம் எப்போதும் சிறப்பாகப் பேசும்" என்ற வள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணாக திரு. தொல் திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பது அவருக்கு நல்லதல்ல. எனவே, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் குறித்த விமர்சனத்தை திரு. தொல் திருமாவளவன் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K