‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்ப்பவர்கள் விஞ்ஞானிகளா? - போராட்டத்தை இழிவுப்படுத்தும் பொன்னார்

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (10:44 IST)
‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை பற்றி எதுவும் தெரியாமல் எதிர்த்துக் குரல் கொடுக்கும் சில அரசியல்வாதிகள் விஞ்ஞானிகளா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நெடுவாசல் பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி, குறிப்பாக கிழக்குக் கடற்கரை பகுதி  மக்கள் விவசாயம், தொழிற்சாலையின்றி பாதிக்கப்பட்டவர்கள். அப்பகுதி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் அமையும் என்றால் அதைக் கொண்டு வருவதில் தவறு இல்லை.

ஆனால், இந்தத் திட்டத்தை பற்றி எதுவும் தெரியாமல் எதிர்த்துக் குரல் கொடுக்கும் சில அரசியல்வாதிகள் விஞ்ஞானிகளா? தேச நலன் கருதி கொண்டு வரும் திட்டங்களை எதிர்க்க இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?

எந்தத் திட்டம் பற்றியும் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும்; சாதக, பாதக அம்சங்களை மக்களுக்குத் தெரிவித்து முடிவெடுக்க வேண்டும். மக்களுக்குப் பாதிப்பு என்றால் திட்டம் தேவையில்லை.

2008-இல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்ற திமுக இருந்த போதுதான் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் வகுக்கப்பட்டது. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்