பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், மாநில கட்சிப் பணிகளை கவனிக்க 6-பேர் கொண்டக் குழுவை பாஜக தலைமை நியமித்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் படிக்க உள்ளார்.
இதனால் தமிழகத்தில் கட்சிப் பணிகளை கவனிக்க பாஜக தலைமை 6 பேர் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக எச். ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாத காலத்திற்கு மேற்குறிப்பிட்ட கமிட்டி கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கள் கட்சி பணிகளை மண்டல வாரியாக பிரித்து செயலாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நபருகும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படும் என்றும் யார் யாருக்கு எந்த மண்டலம் என குழு தலைவர் எச் ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமை செயலதிகாரி அருண் சிங் தெரிவித்துள்ளார்.