அண்ணாதுரை செப்டம்பர் 15, 1909 ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரில் பட்டப்படிப்பு முடித்த அவர், பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். தந்தை பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட அண்ணா, அவருடன் சேர்ந்து பணியாற்றினார். பின் பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1949 ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார்.
பின் 1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்குபெற்ற திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று, முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அண்ணா தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அண்ணா முதலமைச்சரான இரண்டு வருடத்தில் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி பிப்ரவரி 3, 1969 ல் மரணமடைந்தார்.
அதன்படி அண்ணாவின் நினைவு நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.