காணாமல் போய் 2 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் சமூகப் போராளி முகிலன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருப்பது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலை நிர்வாகத்தோடு சேர்ந்து தமிழகக் காவல்துறையினர் அப்பாவிப் பொதுமக்களை எப்படி சுட்டு வீழ்த்தினர் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார் முகிலன். ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாகவும் முகிலன் அறிவித்திருந்தார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குக் கிளம்பிய முகிலன் காணாமல் போயுள்ளார். ஆனால் அவர் வாட்ஸ் ஆப்பில் இரவு 11 மணிவரை ஆன்லைனில் இருந்துள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
முகிலன் காணாமல் போனதை அடுத்து முகிலனுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கின்றனர். பிப்ரவரி 22-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இன்னமும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து முகிலனுக்கு எதிரிகள் யாரும் இல்லை எனவும் ஆலைக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் ஆவணங்களைத் திரட்டி வெளியிட்டதால் மட்டுமே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் குற்ற்ச்சாட்டு வைத்தனர். இதையடுத்து வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. முகிலனைக் காணவில்லை என சிபிசிஐடி போலிஸார் சுவரொட்டிகள் வைத்துத் தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முகிலன் காணாமல் போய் 2 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இப்போது அவர் மீது பெண் ஒருவர் கரூர் மாவட்டம் குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் கூறியுள்ளார். அந்தப் பெண் சமூக போராட்டங்களில் முகிலனோடு ஒன்றாகப் பங்கேற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாற்றுதல், பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போய் 2 மாதம் கழித்து அவர் மீது பாலியல் புகார் சுமத்தப்படுவதால் அவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் சதிச்செயலாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.