ஒரே ஒரு கொடியேற்றத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், 2000 கொடிகளை தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள 36 பஞ்சாயத்துகளில் உள்ள ஒரு பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக கொடிக்கம்பம் நட்டு, கொடியேற்றம் திட்டமிடப்பட்டது.
இதற்காக காவல் நிலையத்தில் அனுமதி பெற மனு கொடுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அனுமதி கொடுக்க தாமதப்படுத்தி வந்தனர். இதனை அடுத்து, அந்த பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அனைத்து வீடுகளிலும் கொடி ஏற்றுவது என்று முடிவு செய்தனர்.
"பொது இடத்தில் கொடியேற்றத்துக்கு போலீஸ் அனுமதி தேவை; எங்களது வீட்டில் கொடியேற்ற அனுமதி தேவையில்லை," என்று கூறிய கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அருண் பிரசாத், ஒவ்வொரு வீட்டிலும் கொடியை ஏற்றினார். அந்தந்த வீடுகளில் உள்ள பொதுமக்களும் அதற்கு அனுமதி அளித்தனர்.
இதுவரை சுமார் 2000 வீடுகளில் கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஆயிரம் வீடுகளில் கொடியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். ஒரே ஒரு கொடியை ஏற்ற அனுமதி கிடைக்காததால், 2000 வீடுகளில் கொடி ஏற்றிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.