மருத்துவமனையில் ஜெயலலிதா : அப்பல்லோ முன் பிரார்த்தனை செய்யும் தொண்டர்கள்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (16:25 IST)
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, அதிமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


 

 
முதல்வர் ஜெயலலிதா, கடந்த 22ம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காயச்சல் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.
 
ஆனால், 8 நாட்கள் ஆகியும் அவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருக்கு மூச்சுத்திணறல், நுரையீரல் மற்றும் சிறுநீரக தொற்றின் பாதிப்புகள் இருந்ததால், அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்து வருகிறார் என்று செய்திகள் வெளியானது. முதல்வரை சந்திக்க அமைச்சர்கள் உட்பட யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
ஒருபக்கம் அவரின் உடல்நிலை குறித்து வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் கூடி, அவர் விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதில் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மேலும், பூசாரி ஒருவர் நடுரோட்டிலேயே கற்பூரம் ஏற்றி, தேங்காய் மற்றும் பூசணிகளை உடைத்து அபிஷேகம் செய்தார். இதைக் கண்ட அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
அடுத்த கட்டுரையில்