அனைத்து கட்சி கூட்டம் : கமலுக்கு அழைப்பு விடுக்காத அதிமுக

Webdunia
வியாழன், 22 பிப்ரவரி 2018 (14:00 IST)
காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விவாதிக்க, அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யக் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக திர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை தர வேண்டும் எனக் கூறியது. மேலும், தமிழகத்திற்கு வர வேண்டிய 14.75 டி.எம்.சி நீரை கர்நாடகத்திற்கே வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
 
எனவே, இது தொடர்பாக ஒரு முடிவு எடுக்க அதிமுக கட்சி சார்பில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் என அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
 
ஆனால், சமீபத்தில் தேர்தல் கமிஷனில் பதிவு செய்து விட்டு நேற்று கமல்ஹாசன் அறிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுபற்றி ஏற்கனவே செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது ‘இதற்கு  முன்பு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதுவே இப்போதும் பின்பற்றப்படும்” என பதில் கூறியிருந்தார். 

 
இத்தனைக்கும், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால் செல்ல வேண்டியிருக்கும் என்பதால்,  இன்று காலை மதுரையிலிருந்து கமல்ஹாசன் சென்னை திரும்பினார். ஆனாலும், அவருக்கு அழைப்பு விடுக்கப்படாததால், அவரின் கட்சியின் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.
 
கமல்ஹாசன் அதிமுக ஆட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். பல புகார்களை கூறி வருகிறார். எனவே, வேண்டுமென்றே, காழ்ப்புணர்ச்சியோடுதான் அவருக்கு அதிமுக அரசு அழைப்பு விடுக்கவில்லை என சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்