அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: 9 பேர் ஆப்செண்ட்!

Webdunia
புதன், 3 ஜனவரி 2018 (12:24 IST)
வரும் 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ளது. இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
 
வழக்கமாக எம்எல்ஏக்கள் கூட்டம் சட்டசபை கூட உள்ள ஒரு நாளுக்கு முன்னர் தான் நடக்கும். ஆனால் இந்த முறை சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் சட்டசபைக்கு வர உள்ளதால் முன்கூட்டியே இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
 
கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு 102 எம்எல்ஏக்கள் தான் வருகை புரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் கூட்டம் முடிந்த பின்னர் 104 எம்எல்ஏக்கள் வருகைபுரிந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு என்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தினகரன் ஆதரவு நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உள்ளதால், இந்த கூட்டத்துக்கு 111 பேர் வந்திருக்க வேண்டும்.
 
ஆனால் 7 பேர் பல்வேறு காரணங்களால் வர முடியவில்லை என கூறப்படுகிறது. இவை எல்லாம் கழித்து 104 எம்எல்ஏக்கள் வந்திருக்க வேண்டும், ஆனால் 102 பேர் தான் கலந்து கொண்டதாகவும், 9 பேர் வரவில்லை எனவும் தகவல்கள் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்