ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தி உடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா நேற்று ஆறு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் விஜய் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழக வெற்றி கழக கட்சியின் அரசியல் ஆலோசகராக ஆதவ் அர்ஜுனாவின் "வாய்ஸ் ஆப் காமன்" என்ற நிறுவனம் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு விரைவில் நடக்கும் என்று கூறப்படும் நிலையில், சற்றுமுன் அவர் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்ற வார்த்தைகளுடன் கூடிய ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், அவர் சிறு வயது முதல் கஷ்டப்பட்டது, படித்தது, பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டது உள்ளிட்ட காட்சிகள் இருப்பதை அடுத்து, அவர் விரைவில் ஒரு நல்ல முடிவை எடுக்கப் போகிறார் என்பதை இந்த வீடியோ மூலம் குறிப்பிட வைக்கின்றது.
சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டில் "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என்று விஜய் முழங்கிய நிலையில், அதே முழக்கத்தை ஆதவ் அர்ஜூனாவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.