மத்திய பிலிப்பைன்ஸில் நேற்று இரவு ரிக்டர் அளவில் 6.9 பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. செபு தீவுக்கு வடக்கே, 90,000 மக்கள் வசிக்கும் போகோ நகருக்கு அருகே நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்தனர் மற்றும் 147 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் 22 கட்டிடங்கள் சேதமடைந்தன. செபு அருகே உள்ள பன்டாயன் தீவில் உள்ள பழங்கால கத்தோலிக்க தேவாலயத்தின் மணி கோபுரம் இடிந்து முற்றத்தில் விழுந்தது. போகோவில் ஒரு துரித உணவு விடுதி மோசமாக சேதமடைந்தது. போகோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள செபு நகரிலும் கட்டிடங்கள் சேதமடைந்தன. இங்கு ஒரு வர்த்தக வளாகத்தின் உலோக கூரை இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டதால் செபு மற்றும் அருகிலுள்ள மத்திய தீவுகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இருப்பினும், சிறிது நேரத்தில் மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டது. இரவு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்தாலும், அடுத்தடுத்த அதிர்வுகள் காரணமாக மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.