குடிநீர் பைப் லைனுக்காக வெட்டிய பள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனியார் பள்ளி வாகனம்!

J.Durai
புதன், 25 செப்டம்பர் 2024 (13:46 IST)
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே குடிகாடு கிராம பேருந்து நிறுத்தத்தில் இருந்து
கிராமத்திற்கு உள்ளே செல்லும் சாலை மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது.
 
அது மட்டும் அல்லாமல் மழை பெய்ததால் சாலையில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேரும் சகதியுமாகவும் மழை தண்ணீர் தேங்கியும் இருந்து வருகிறது. இவ்வாறான சூழலில்  பள்ளி மாணவர்களை ஏற்ற சென்ற தனியார் பள்ளி வாகனம் பள்ளி மாணவர்கள் உள்ளே இருந்த நிலையில் குடிநீர் பைப் லைனுக்காக வெட்டப்பட்ட  இரண்டடி பள்ளத்தில் நீண்ட நேரமாக சிக்கிக்கொண்டது.
 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக  பேருந்து உள்ளே இருந்த பள்ளி மாணவர்கள் பத்திரமாக இறக்கி விடப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு  தனியார் பள்ளி வாகனம் டிராக்டர் மூலம் கட்டி இழுக்கப்பட்டது. 
 
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது.......
 
திட்டமிடாமல் குடிநீர் பைப் லைன் அமைப்பதால்  பள்ளி வாகனம் சிக்கிக்கொண்டது. மேலும் கிராமத்தில் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு சாலை மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. 
 
இது கடந்த பல மாதங்களாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. 
 
உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்