தமிழக மீனவர்கள் 4-பேர் கைது..! இலங்கை கடற்படை அட்டூழியம்..! ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்..!!

Senthil Velan

செவ்வாய், 18 ஜூன் 2024 (15:35 IST)
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நான்கு பேருக்கு ஜூலை இரண்டாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 241 விசைப்படகுகளில் திங்கள்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற  பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28) மற்றும் ராமதாஸ் (52) ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துள்ளனர்.
 
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, 4  மீனவர்களை கைது செய்ததுடன் அவர்களது படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 
தொடர்ந்து யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மீனவர்கள் நான்கு பேரை ஜூலை இரண்டாம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

ALSO READ: தமிழ்நாட்டில் ஜூன் 21 வரை மழைக்கு வாய்ப்பு..! 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!!

கைதான மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்