தமிழகத்தை மிரட்டிக் கொண்டிருந்த நிவர் புயல் ஒருவழியாக இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் கரை கடந்தது என்பதும் இந்த புயல் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளை புரட்டிப் போட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக சென்னையின் பல சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து கிடந்ததும் மின்கம்பங்கள் சாய்ந்து இருந்ததும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகும். ஆனால் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக உடனடியாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்து இருந்தார். ஆனால் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
அதுமட்டுமின்றி 26 ஆடு மாடுகள் உயிரிழந்ததாகவும் 16 ஏக்கரில் வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக முதல்கட்ட சேத மதிப்பு குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நிவர் புயலால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் இந்த கணக்கீடு குறித்தான முழு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது