25,000 ஏக்கர் தண்ணீர் இன்றி கருகும் அவலம்- விவசாயிகள் வேதனை......

J.Durai
புதன், 11 செப்டம்பர் 2024 (15:33 IST)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே எடையார், திருநாரையூர், நடுத்திட்டு, குமராட்சி, செங்கழுநீர்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
 
இவற்றிற்கு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாத காரணத்தினால் 25,000 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து கடந்த ஏழாம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியான நிலையில், அது 13-ஆம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்தாலும் அது கடைமடை வரை வந்து சேருமா என விவசாயிகள் வேதனை அடைந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 
பாசன வாய்க்கால்கள் தூர்ந்து போய், ஆக்கிரமிப்பிலும் உள்ள நிலையில், மேலும் பாசன மதகுகள் சீரமைக்கப்படாத நிலையிலும் தண்ணீர் வயல்களுக்கு செல்வதில் தடை இருந்து வருகிறது. மேலும் விவசாயிகள் கருகும் நேரடி நெல் வயல்களை கண்டு மனவேதனை அடைந்துள்ளனர். இதனால் கூலிக்கு ஆட்களை வைத்து குடங்களில் தண்ணீர் எடுத்து நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களில் தெளித்து வருகின்றனர்.
 
மேலும் வாடகைக்கு டீசல் இன்ஜின் எடுத்தும் மற்றும் டிராக்டர்களில் டீசல் என்ஜின் பொருத்தியும் வயல்களுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர். 
இதனால் தேவையில்லாமல் ஒவ்வொரு விவசாயிக்கும் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு ஏற்படுகிறது என தெரிவிக்கின்றனர்.   அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயிர் காப்பீட்டு நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், வாய்க்கால்களை ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வார வேண்டும், சரியான அளவில் பாசன மதகுகளை சீரமைத்து ஷட்டர் பொருத்தியும் தர வேண்டும் எனவும் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர். 
 
இது கடந்தாண்டை போலவே இந்த ஆணடும் தொடர்ந்து வருவது வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.  அரசின் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்