தலைமறைவாகி உள்ள வேந்தர் மூவிஸ் மதனை பிடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்று காவல் துறையினரை விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.
இதனையடுத்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.
மேலும், வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், காணாமல் போன வேந்தர் மூவிஸ் மதனை கண்டிபிடிக்க உத்தரவிட்டது.
இது குறித்த வழக்கை விசாரிக்க காவல்துறை கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு விசாரணை அதிகாரி ராதாகிருஷ்ணன் கோர்ட்டில் ஆஜராகி, மதனை கண்டு பிடிக்க மேலும் 2 வார கால அவகாசம் வேண்டும் என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மேலும் 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.