யூடியூப் பார்த்து கைத்துப்பாக்கி செய்த 2 பேர் கைது !

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (00:16 IST)
ஓமலூர் அருகே யூடியூப் பார்த்து கைத்துப்பாக்கி செய்த 2 வாலிபர்களை ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வாகன தணிக்கையின் போது பிடிபட்ட 2 வாலிபர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி பகுதியில் ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சேலத்திலிருந்து ஓமலூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் இரண்டு கைத்துப்பாக்கிகள், மற்றும் துப்பாக்கிகள் செய்வதற்கான உதிரிபாகங்கள், முகமூடிகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை ஓமலூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில்  இருவரும் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் சஞ்சய் பிரகாஷ் வயது 25, சேலம் கிச்சிபளையம் பகுதியை சேர்ந்த முத்து மகன் நவீன் சக்கரவர்த்தி வயது 25 என்பதும் தெரியவந்தது. இதில் சஞ்சய் பிரகாஷ் பொறியியல் பட்டதாரி ஆவார். நவீன் சக்கரவர்த்தி எம் சி ஏ படித்துள்ளார். இருவரும் படிக்கும் போதிலிருந்து  நண்பர்களாக இருந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்து கைத்துப்பாக்கி செய்வது எப்படி என்று பார்த்து துப்பாக்கிகள் செய்து வந்துள்ளனர். மேலும்  ஆயுதங்கள் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக அவர்கள் கூறுகையில் நாட்டில் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் இவர்கள் தீவிரவாத கும்பலை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவர் மீதும் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓமலூர் அருகே கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாலிபர்கள் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இதுபோன்று துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் செய்யும் இடங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்