17-வயது காதலியை காற்று துப்பாக்கியால் சுட்ட 19-வயது காதலன்!

J.Durai
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:05 IST)
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே துவராபதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் 12 ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.
 
கொட்டாம்பட்டி அருகே உள்ள வெள்ளமலைப்பட்டியை சேர்ந்த வீரையா மகன் செல்லம் (19) என்பவர்  சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ  நிகழ்ச்சிக்காக வந்த செல்லம் , அவரது சித்தப்பா அண்ணாமலை என்பவரின் வீட்டில் தனிமையில்  காதலியை சந்தித்து இருவரும்  பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 
 
அப்போது செல்லம் என்பவருக்கு வேறு ஒரு பெண்ணுடன்  தொடர்பு இருப்பதாக கூறி காதலி காதலனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.  இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த செல்லம்  அங்கு அண்ணாமலை வீட்டிலிருந்த காற்று துப்பாக்கியால் (AIR GUN) காதலியை சுட்டுவிட்டார்.  
 
இதில் 17 வயது சிறுமி (காதலிக்கு) மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
 
காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த செல்லம், எலி மருந்தை  சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக  காதலியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், செல்லத்தை  மதுரை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  
 
மேலும் சம்பவ இடத்திற்கு   காவல் துறை திண்டுக்கல் ஊரக துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யன் பார்வையிட்டு விசாரணை செய்தார்.
 
காதலன் காதலியை காற்று துப்பாக்கியால் (AIR GUN) சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்