10ம் வகுப்பு ரிசல்ட்டை பார்க்கும் முன்பே மாணவன் உயிரிழப்பு.. லாரி மோதி விபத்து..!

Mahendran

வெள்ளி, 10 மே 2024 (11:04 IST)
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர் ரிசல்ட் பார்க்கும் முன்பே விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு படித்த மாணவர் ஜீவா என்பவர் இன்று மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவை காண காத்திருந்த நிலையில் அவர் மதுரவாயல் பாலத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது எதிரே வந்த லாரி திடீரென மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரியை ஓட்டி வந்த டிரைவர் சாலையிலேயே வண்டியை நிறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகி உள்ள நிலையில் தேர்வு முடிவை பார்க்கும் முன்பே மாணவர் ஜீவா பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்த நிலையில் அவருடன் படித்த மாணவர்கள் ஜீவாவின் உடலுக்கு மாலை மரியாதை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஜீவாவின் மரணம் காரணமாக பெரும் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்