1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு.! "தொழில் வளர்ந்தால், மாநிலமும் வளரும்" - முதல்வர் ஸ்டாலின்..!!

Senthil Velan
புதன், 21 ஆகஸ்ட் 2024 (12:35 IST)
2030ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டாலர் என்ற  பொருளாதார இலக்குடன் தமிழக அரசு செயல்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் ரூ.17,616 கோடி முதலீட்டில் 19 முடிவுற்ற திட்டங்களை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட ரூ.51 ஆயிரம் கோடி மதிப்பிலான 28 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். புதிய தொழில் திட்டங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து தமிழக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். அனைத்து துறை வளர்ச்சி என்பது அனைத்து சமூக வளர்ச்சி ஆகும் என்றும் 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.
 
உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் நாம் ஈர்த்த முதலீடுகள் தான் நமது வெற்றிக்கு காரணம் என பெருமிதம் தெரிவித்த அவர்,  2030ம் ஆண்டில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்கா டாலர் என்ற இலக்குடன் தமிழக அரசு செயல் படுகிறது என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பது உலகிற்கு தெரியும் என்றும் பெண்கள் அதிகம் பணிபுரியும் மாநிலத்தில் பெண்களுக்காகவே பல்வேறு திட்டங்கள் உள்ளன என்றும் முதல்வர் தெரிவித்தார்.
 
தமிழகம் அமைதியான மாநிலம் என்பதால் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்ற மனநிலை முதலீட்டாளர்களுக்கு வந்துள்ளது என்று அவர் கூறினார். தொழில் வளர்ந்தால் தான் மாநிலமும் வளரும் என்றும் மக்களின் வாழ்க்கையும் உயரும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

ALSO READ: குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பு.! சீரம் இந்தியா நிறுவனம் தகவல்..!
 
தமிழக இளைஞர்களின் திறமையை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் துவங்குவதன் மூலம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்