இத்தனை வகை கசாயங்களா? ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்கள்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (22:25 IST)
ஊரெங்கும் காய்ச்சல். டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் என வரிசை கட்டி நிற்கிறது. காணாக்குறைக்கு புதுவரவாக ஜிகா வைரஸ் என்ற ஒன்று காய்ச்சலை ஏற்படுத்தி மக்களை பாடாகப்படுத்தி வருகிறது.
மழைக்காலங்களில் வந்து உயிரைப் பறிக்கும் இந்த விஷக்காய்ச்சல்களுக்குக் காரணமாக சாக்கடை, தேங்கிக் கிடக்கும் நீர், சுகாதாரக்கேடு, கொசுக்கடி, வெளி உணவு என பலவற்றைச் சொன்னாலும் மக்களின் அறியாமை, விழிப்புணர்வு இன்மையையும் ஒரு காரணமாகச் சொல்ல  வேண்டி இருக்கிறது. அதுஒருபுறமிருக்க, இன்றைக்கு அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உயர்தர மருத்துவம் அளிக்கப்படுவதாகச் சொல்லப்படும் அலோபதி மருத்துவத்தால் சில நேரங்களில் இந்த வகைக் காய்ச்சல்களை முழுமையாகக் குணப்படுத்த முடியவில்லை.  இவற்றுக்கெல்லாம் நம் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமே தீர்வு கிடைக்கிறது. 
 
எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் முழுமையான குணம் கிடைக்கிறது. இதை உணர்ந்துகொண்ட இன்றைய அரசாங்கம் இலவசமாக நிலவேம்புக் கசாயம் வழங்கி வருகிறது. ஆம்... இயற்கையை இறைவன் படைத்தது மனிதர்களின் நலனுக்காகவே! அதை நாம் புரிந்துகொள்ள  வேண்டும். சரி... விஷயத்துக்கு வருவோம். காய்ச்சல்... எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு மிளகு கசாயம்  அல்லது கறிவேப்பிலை குடிநீர் பலன் தரும். 
 
 
 
மிளகுக் கசாயம்:
 
கைப்பிடி மிளகை வெறும் வாணலியில் (எண்ணெய் ஊற்றாமல்) தீக்கங்குகள் வருமளவு வறுக்க வேண்டும். அதை அடுப்பிலிருந்து இறக்கி  அதில் ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாகக் கொதிக்க விட வேண்டும். காய்ச்சலின் தீவிரத்தைப் பொறுத்து காலை, மாலை, இரவு என்றோ  இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறையோ இந்தக் கசாயத்தைக் கொடுத்து வந்தால் நிச்சயம் காய்ச்சல் குணமாகும். 
 
கறிவேப்பிலை குடிநீர்: 
 
கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, அதைவிட இன்னொரு மடங்கு அதிகமாக சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் விட்டுக் கலந்து வடிகட்டினால் கறிவேப்பிலைக் குடிநீர் தயார். இதனுடன் தேன் சேர்த்து காலை, மாலை, இரவு என காய்ச்சல்  குணமாகும்வரை கொடுக்க வேண்டும். இவை இரண்டில் ஒன்றைச் செய்தாலே நிச்சயம் எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் குணமாகும். 
 
நிலவேம்புக் கசாயம்
 
அப்படியும் சரியாகவில்லை என்றால் நிலவேம்புக் கசாயம், மலைவேம்பு இலைச்சாறு, பப்பாளி இலைச்சாறு குடிக்கக் கொடுக்கலாம். நிலவேம்புக் கசாயம் என்பது வெறும் இலைகளை மட்டும் நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பது ஒருமுறை. இது காய்ச்சல் வருவதற்கு முன்பே தடுத்துக் கொள்ளும் முறையாகும். அதேநேரத்தில், நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்படாகம், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் போன்ற கடைச்சரக்குகள் அனைத்தும் சேர்ந்த கலவையை தேவையான அளவு எடுத்து நீர் விட்டு கசாயம்  செய்து குடிப்பது இன்னொரு முறையாகும்.  இதை காலை, மாலை என காய்ச்சல் குணமாகும் வரை குடிக்கலாம். இதேபோல் மலைவேம்பு  இலைச்சாறும் காய்ச்சலைக் குணப்படுத்தும். 
 
 
 
மலைவேம்பு
 
பச்சையாகப் பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மில்லி வீதம் காலை, மாலை என மூன்று நாள்  குடித்தால் டெங்கு காய்ச்சல் விலகிச் செல்லும். ரத்தத்தில் பிளேட்லெட் செல்கள் எனப்படும் ரத்த தட்டணுக்களை திடீரென்று குறைத்துவிடும். டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலின்போது பப்பாளி இலைச்சாறு குடிப்பது கைமேல் பலன் தரும்.
 
பப்பாளி இலை கஷாயம்:
 
மரத்திலிருந்து பறித்த பப்பாளி இலையில் காம்பு மற்றும் நடுநரம்புகளை அகற்றிவிட்டு மூன்று ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்க வேண்டும். அதனுடன் அரைத்த (சிறிதளவு)  இஞ்சியைச் சேர்த்து நீர் விட்டு வடிகட்டி தேன் சேர்த்துக் குடிக்கலாம். வெறும் பப்பாளி இலையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து  கசாயமாக்கியும் குடிக்கலாம். இவற்றில் 10 மில்லி வீதம் தினமும் நான்கு தடவை குடித்தால்போதும்; மளமளவென ரத்த தட்டணுக்கள்  அதிகரிக்கும்.
 
இந்தக் கசாயங்களை 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது மட்டும் கவனம் தேவை. அவர்களின் வயதைப்பொறுத்து அளவை குறைத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே மருத்துவர்களின் பரிந்துரையுடன் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் நல்லது. மற்ற வயதினர் தாராளமாக குடிக்கலாம். வழிநெடுக இப்போது இலவசமாக நிலவேம்பு கசாயம் கொடுக்கிறார்கள். அவற்றை தாராளமாக வாங்கி குடிக்கலாம். டீ, காபி குடிப்பதுபோல இந்தக் கசாயங்களைக் குடிக்கலாம், தவறில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்