உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பேசிய முகலாய பேரரசராக இருந்த ஒளரங்கசீப் வாரிசுகள் தற்போது ரிக்ஷா ஓட்டுனராக இருப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யோகி ஆதித்யநாத், "முகலாய பேரரசராக இருந்த ஔரங்கசீப் வாரிசுகள் கொல்கத்தா அருகே ரிக்சா இழுத்து வாழ்ந்து வருவதாக என்னிடம் சிலர் கூறினார்கள். ஒளரங்கசீப் தெய்வீகத்தை மீறி, கோவில்கள் மற்றும் மத ஆலயங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால், அவரது சந்ததியினர் இந்த சூழ்நிலையை கொண்டிருக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்தார்.
"நமது முன்னோர்கள் உலகம் ஒரு குடும்பம் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கருத்தை சொல்லி வந்தனர். நெருக்கடியான காலங்களில் அனைத்து பிரிவினருக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரே மதம் சனாதன தர்மம் மட்டுமே" என்றும் அவர் கூறினார்.
"பல நூற்றாண்டுகளாக இந்து கோயில்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சனாதனம் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
முகலாய பேரரசர் ஒளரங்கசீப் வாரிசுகள் தற்போது ரிக்சா இழுத்து கொண்டு இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.