பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, “பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக பிரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம், இரு நாடுகளுக்கிடையே மேலதிக பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதன்பின், இந்தியா, நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை நாடு விட்டு வெளியேற உத்தரவிட்டது மற்றும் அவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில், சுப்ரமணியன் சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில், “பாகிஸ்தானை நான்கு பாகங்களாக பிரிக்க வேண்டும். அது மட்டுமே இந்தியாவுக்கான நிரந்தர தீர்வு” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தானை — பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் மற்றும் மேற்கு பஞ்சாப் ஆகிய நான்கு பகுதிகளாக பிரித்து, அவற்றை தனித் தனி நாடுகளாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தற்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் பகுதிகளில் கிளர்ச்சி நிலவுகிறது. இந்தியா எதிர்கொள்ள வேண்டியது தற்போது எஞ்சியுள்ள பாகிஸ்தானே. எனவே, இந்தியா அந்த எஞ்சிய பாகிஸ்தானை முற்றிலும் அழித்துவிட வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் கூறினார்.