சட்ட விரோதமாக அமெரிக்கா செல்ல ஒரு கோடி ரூபாய் ஏஜென்டிடம் கொடுத்தேன் என்றும், ஆனால் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அமிர்தசரசில் வந்து இறங்கினேன் என்றும் பெண் ஒருவர் கண்ணீருடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு சென்ற 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அதில் ஒருவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது லவ்ப்ரீத் கவுர் என்பவரும் ஒருவர். இவர் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தன்னுடைய மகனுடன் ஏஜென்சி ஒன்றின் மூலம் அமெரிக்காவுக்கு சென்றார். அதற்காக, அவர் ஒரு கோடி ரூபாய் அந்த ஏஜென்டிடம் பணம் கொடுத்ததாக கூறியுள்ளார்.
தன்னுடைய கணவர் அமெரிக்காவில் பணி செய்கிறார் என்பதால், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து புறப்பட்ட இவர் கொலம்பியா குடியரசு நாட்டிற்குச் சென்று, அதன் பின் அங்கிருந்து எல் சால்வடார் என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து மூன்று மணி நேரம் நடந்தே கௌதமாலா என்ற பகுதிக்கு சென்று, மெக்சிகோ எல்லை வரை டாக்ஸியில் அழைத்து சென்றுள்ளனர். மெக்சிகோ-அமெரிக்கா எல்லையில் இரண்டு நாட்கள் தங்கி இருந்த நிலையில், ஜனவரி 27ஆம் தேதி அமெரிக்காவுக்குள் சென்றுள்ளனர்.
"அமெரிக்காவில் நுழைந்து விட்டோம். இனி கணவரை சந்தித்து விடலாம்" என்று நினைத்த நிலையில், திடீரென அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அங்கிருந்து நேராக விமானத்தில் அமிர்தசரஸ் வந்து இறங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"எங்கிருந்து கிளம்பினோமோ, அங்கேயே மீண்டும் வந்து விட்டோம். எங்களுடைய ஒரு கோடி ரூபாய் வீணாகிவிட்டது" என்று அவர் கண்ணீருடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.