உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த ஒரு பெண் மதம் மாற மறுத்ததையடுத்து, அப்பெண்ணைத் தாக்கி மிரட்டி, கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
25 வயதான அந்தப் பெண், 2023-ஆம் ஆண்டில் லக்னோவின் பிபிடி பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், 2024 ஆகஸ்ட்டில் தனது தந்தையின் மரணம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, ஒரு சிறிய உணவு கடையைத் தொடங்கி நடத்தி வந்தார்.
அப்போது, தன்னை "ராஜ்" என்று அறிமுகப்படுத்தி கொண்ட ஒரு நபர், அப்பெண்ணிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நாளடைவில், அந்த நபர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த நபரின் உண்மையான பெயர் முகமது ஃபர்கான் என்றும், அவர் தனது மத அடையாளத்தை மறைத்து பழகி வந்ததும் அந்த பெண்ணுக்குத் தெரியவந்தது.
உண்மை வெளிவந்த பிறகு, ஃபர்கான் அப்பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்தபோது, ஃபர்கான் அப்பெண்ணை உடல் ரீதியாக தாக்கியதாகவும், கழுத்தை நெரித்து கொலை செய்வதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவரது ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
மேலும் ஃபர்கான் அவரது அறையின் பூட்டை உடைத்து, ரூ.25,000 ரொக்கத்தை திருடி சென்றுவிட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.