இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடந்த அதேசமயம் ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல்களும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதுடன், ஒடிசாவிலும் பாஜக சட்டமன்றத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் நடப்பு முதல்வர் நவீன் பட்நாயக் பதவி இழக்கிறார்.
தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் தொடங்கியது முதலே பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் பிஜூ ஜனதா தலைவர் நவீன் பட்நாயக்கிற்கு தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியனுடன் உள்ள நட்புறவை குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தற்போது பாஜக ஒடிசாவில் வெற்றிபெற்றுள்ள நிலையில் அடுத்தபடியாக நவீன் பட்நாயக் – வி.கே.பாண்டியன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் தொடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வி.கே.பாண்டியன் தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர் “நான் நவீன் பட்நாயக்கிற்கு உதவவே அரசியலுக்கு வந்தேன். என்னிடம் என்னுடைய மூதாதையரின் சொத்துக்களை தவிர வேறு எந்த சொத்தும் கிடையாது. பிஜூ ஜனதா கட்சியின் தோல்விக்கு காரணம் நானாக இருந்தால் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். இதுநாள் வரை நவீன் பட்நாயக்கிற்கு வலதுகை போல செயல்பட்டவர் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பிஜூ ஜனதா கட்சியினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.