இந்தி நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் விரும்பும் பணியை தருவதாக இந்தி இசையமைப்பாளர் விஷால் டத்லானி அறிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகையான கங்கனா ரனாவாத் பாஜக ஆதரவாளராக இருந்து வரும் நிலையில், மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்,பியாகவும் ஆகியுள்ளார். இந்நிலையில் நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் கங்கனாவை கன்னத்திலேயே அறைந்தார். கங்கனா முன்னதாக விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியதன் காரணமாக அறைந்ததாக அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து கங்கனா அளித்த புகாரால் அந்த பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அந்த பெண் காவலருக்கு ஆதரவாக பலரும் பேசி வருகின்றனர். அதில் இந்தியின் பிரபல இசையமைப்பாளரான விஷால் தத்லானியும் ஒருவர். விஷால் தத்லானி இந்தியில் ரா1, ஃபைட்டர், ஓம் சாந்தி ஓம் என பல படங்களுக்கு இசையமைத்தவர்.
கங்கனா ரனாவத் தாக்கப்பட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர் “நான் பொதுவாக வன்முறையை ஆதரிப்பவன் அல்ல. ஆனால் இந்த தருணத்தில் அந்த பெண் காவலரின் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடிகிறது. அந்த பெண் காவலருக்கு இதனால் பணியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர் விரும்பினால் அவருக்கான வேலை காத்திருக்கிறது. ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என பதிவிட்டுள்ளார்.