ஹரியானா மாநிலம் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் தூய்மை பணியாளர்களான சில பெண்கள், பணிக்கு தாமதமாக வந்ததற்கு காரணம் மாதவிடாய் என்று கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த மேற்பார்வையாளர்கள் வினோத் மற்றும் ஜிதேந்தர், உண்மையை நிரூபிக்க ஆடைகளை களைந்து, சானிட்டரி நாப்கின்களை புகைப்படம் எடுத்துவர வற்புறுத்தியுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்துக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு மேற்பார்வையாளர்கள் மீதும் பாலியல் துன்புறுத்தல், கண்ணியத்துக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து உள் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. மேலும், பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.