இந்தியாவின் பல பகுதிகளில் வேலையில்லா திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில் குஜராத்தில் 10 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் அதேசமயம் வேலையில்லா திண்டாட்டங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பல மாநிலங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து பல இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். மேலும் பலர் அரசாங்க பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்காக ஆண்டுக் கணக்கில் முயற்சித்து வருகின்றனர்.
சமீபத்தில் குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் லார்ட்ஸ் ப்ளாசா ஹோட்டலில் உள்ள தெர்மாக்ஸ் என்ற நிறுவனம் 10 காலி பணியிடங்களுக்காக ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்துள்ளது. இதை அறிந்த ஏராளமான இளைஞர்கள் அந்நிறுவனத்தில் வேலை பெறுவதற்காக காலையிலேயே தங்களுடைய சர்டிபிகெட் சகிதம் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.
இளைஞர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் தடுப்பு வேலியும் உடைந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் 10 பணியிடங்களுக்காக சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் நேர்காணலுக்காக வந்து குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K