யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

Siva
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (07:29 IST)
யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியான நிலையில் இதில் 1.70 லட்சம் பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேரவும், மத்திய அரசின் உதவித்தொகை பெற்று பிஎச்டி போன்ற உயர்நிலை ஆராய்ச்சி படிப்புகளை தொடரவும், யுஜிசி நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுக்கு இரண்டு முறை  இந்த நெட் தேர்வுகளை நடத்துகிறது.

2024ஆம் ஆண்டின் ஜூன் மாதத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு கடந்த ஜூன் 19-ந் தேதி நடந்தது. ஆனால், சில முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதால் மத்திய கல்வி அமைச்சகம் அந்த தேர்வை ரத்து செய்தது.

அதன் பின், யுஜிசி நெட் மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 6.84 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். தற்போது, யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன, இதில் மொத்தம் 1,70,734 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில், பிஎச்டி க்கு தகுதியானவர்கள் 1,12,070 பேர் உள்ளனர்.

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள, ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். மேலும் சந்தேகங்கள் இருப்பின், 011-40759000 என்ற உதவி மைய எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு http://www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்