இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஷில்லை கிராமத்தில் வசிக்கும் 'ஹட்டி' என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த சுனிதா என்ற பெண், பிரதீப் மற்றும் கபில் ஆகிய இரு சகோதரர்களை மணந்து கொண்டார். இந்த பழங்குடி சமூகத்தை பொறுத்தவரை, ஒரு பெண் இரண்டு நபர்களை மணந்துகொள்வதற்கு 'ஜோடிதாரா' என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரியமாக அந்த சமூகத்தில் நடந்துவரும் ஒரு திருமணம் என்றும், எந்தவித அழுத்தமும் இன்றி மணப்பெண் இந்த உறவுக்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.
மணமகன்களில் ஒருவரான பிரதீப், தான் ஒரு அரசுத் துறையில் பணிபுரிவதாகவும், இன்னொருவரான கபில் வெளிநாட்டில் வேலை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். "நாங்கள் இருவரும் பகிரங்கமாக இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டோம். இதில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை. இது எங்கள் குடும்பத்தின் கூட்டு முடிவு" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாக இதுபோன்ற திருமணங்கள் ஹட்டி பழங்குடியினர் பிரிவில் நடந்து வருவதாகவும், ஆனால் தற்போது இத்தகைய திருமணங்கள் குறைந்துவிட்டதாகவும் இந்தச் சமூகத்தின் பெரியவர்கள் கூறி வருகின்றனர். பெரும்பாலான இந்த திருமணங்கள், குடும்ப சொத்துக்கள் வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் நடத்தப்படுகின்றன என்றும் கூறப்பட்டு வருகிறது.